Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது.தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள்கள் திருத்தும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு பொதுதேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் எஞ்சிய ஒரு தேர்வும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு எழுதும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பலமுறை ஒத்திவைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் நாளை தொடங்குகிறது. 48 லட்சம் விடைத்தாள்கள் சுமார் 67 மையங்களில் நாளை முதல் நடைபெறும் என கூறப்பட்ட நிலையில் தற்போது 202 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி அங்கு நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக விலகலை கடைபிடித்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்க வேண்டும் என்பதால் தியேத்தும் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலையில் 15, மாலையில் 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். மற்ற முக்கிய பாடங்கள் காலையில் 10, மாலையில் 10 விடைத்தாள்கள் திருத்தம் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்துள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் பணி தவிர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தலைமை கண்காணிப்பாளர் 6 பேர் பணியில் ஈடுபடுகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்திய பின்னர், 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தப்படும் என்றும் 15 நாட்களுக்குள் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 3-வது வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |