மற்ற நாடுகளுக்கு சொந்தமான பகுதிகளில் ஊடுருவிய, பின்னர் அந்த பகுதி தங்களுக்கே சொந்தம் என கூறி பிரச்சனையில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது சீனா. தற்போது அந்த நாடு கண் வைத்திருக்கும் இடம் லடாக். அங்கு இந்தியா சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி லடாக் எல்லை பகுதியில், சீன வீரர்கள் அத்துமீறியதோடு, கற்களை வீசி இந்திய வீரர்களை தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு அது ஆறாம் தேதி காலை வரை நீடித்தது.
இதோடு பிரச்சனை முடியும் என எதிர்பார்த்த நிலையில் ஒன்பதாம் தேதி சிக்கிமில் இரு நாட்டுப் படைகளும் மோதின. இதனால் எல்லையில் இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் சீனா தனது படைகளைக் குவித்து வைத்துள்ளது. பாங்காங் ஏரி, கால்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், இந்திய எல்லைக்கு அருகிலேயே சீன ராணுவ வீரர்கள் முகாமிட்டு தங்கியுள்ளனர். பதுங்கு குழிகளை அமைத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக பாங்காங் ஏரி பகுதியில் அத்துமீறி இந்திய பகுதிக்குள் சீன வீரர்கள் படகுகள் மூலம் நுழைகின்றனர். இவ்வாறு பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்தியாவும், இப்பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது. ராணுவ வீரர்களை குவித்துள்ள மத்திய அரசு ரோந்து பணிகளையும் அதிகரித்துள்ளது. பதற்றத்தை தணிக்க பிராந்திய கமாண்டர்கள் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பொதுவாக சீன படைகள் ஊடுருவுவதும், பின்வாங்குவதும் அடிக்கடி நடக்கும் ஒன்று தான் என்றாலும், இம்முறை முகாம்கள், பதுங்குகுழிகள் அமைப்பது போன்ற பணிகளை சீனா முன்னெடுப்பது சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
எல்லை பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருக்கும் சீனர்களை தாயகம் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் சீனா தொடங்கியுள்ளது. இந்தநிலையில் தான் பிரதமர் மோடி நேற்று ராணுவ அதிகாரிகளுடன் இந்த விஷயங்களை பேசி இருந்தார்.