தமிழகம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகம் உள்ளதால் சென்னை தவிர பிற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. அதன்படி 202 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிகள் தொடங்கியுள்ளது. 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரும் ஆசிரியர்களுக்கு வசதியாக போக்குவரத்து ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே செய்துள்ளனர். விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் ஒவ்வொரு நாளும் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்குவதற்கு முன்பும், பணிகள் முடிந்த பின்பும் இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 3 முகக்கவசங்கள் வழங்கப்படுள்ளது. மேலும் ஒவ்வொரு நபருக்கும் தனித்தனியாக கிருமி நாசினி வழங்கப்பட்டு மையங்களில் சமூக இடைவெளி பின்பற்றி திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஜூன் 23ம் தேதி நிறைவு பெறுகின்றன. 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் ஜூன் 3வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.