தமிழகத்தில் மே 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனோவால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 31ம் தேதி வரை 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்படும் தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆலோசனையில் துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கை விலக்கலாமா? அல்லது மேலும் சில தளர்வுகள் அளித்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வுகளும் வழங்க கூடாது என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.