ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் ஆர்.எஸ்.பாரதி மீது புகார் அளித்திருந்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் மே 23ம் தேதி ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளனர்.