11.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வருட காலம் முடிந்து இருக்கும் நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சரவை கூட்டம் அவரது தலைமையில் நடக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பொது முடக்கத்தை படிப்படியாக விளக்குவது குறித்த நடவடிக்கைகள் என ஆலோசனைகள் நடைபெற உள்ளன. கொரோனாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
அதே சமயத்திலே மாநில அரசுகளின் கோரிக்கைகளும் இந்த கூட்டத்தில் பேசப்படும் என தெரிகிறது. இதைவிட இந்தியா – சீனா எல்லையில் இருந்த பதற்றம் தற்போது தனிந்து இருந்தாலும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்ற கருத்து நிலவுவதால் அது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என தெரிகிறது. அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதில் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் சரியான முறையில் அமல் படுத்தப் படுகிறதா என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என சொல்லப்படுகின்றது.