சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் செல்லவில்லை.
அன்றைய தலைமுறைக்கு உணவு உடைகளை காட்டிலும் சுயமரியாதை அடிப்படைத் தேவையாக இருந்தது. பிறப்பால் வேற்றுமைகளும் அவமதிப்பையும் அனுபவித்து வளர்ந்தார் முத்துவேல் கருணாநிதி. 1940ல் திருவாரூர் பள்ளியில் வகுப்பில் சேர இடம் மறுக்கப்பட்டு தன்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் பள்ளியின் எதிரில் உள்ள குளத்தில் குதித்து விடுவேன் என உயிரை அடைமானம் வைத்து தனக்கான உரிமையை அந்த சிறு வயதிலேயே பெற்றார். கருணாநிதியின் இந்த போராட்ட குணம் தமிழகத்தை அறிந்து முறையான ஆட்சி செய்ய உதவியது.
சுயமரியாதை கருத்துக்களும் திராவிட கொள்கைகளும் கருணாநிதியை உள்ளூர தீ மூட்டி விடுகின்றது. ஆசிரியர் தண்டபாணி தேசிகர் வருகை சமூக அரசியலை புரியவைக்கிறது. ஒரே சிந்தனை கொண்ட ண்பர்கள் ஒன்று இணைகிறார்கள். படிப்போடு அரசியலை கற்றவர்கள் படிப்புக்கு நேரம் குறைத்து அரசியலுக்கு நேரத்தை அதிகரிக்க 1938இல் கையில் தமிழ் கொடி ஏந்தி கொண்டு நாள்தோறும் மாலை நேரங்களில் மாணவர்கள் பலருடன் அணிவகுத்து திருவாரூர் வீதி வலம் வந்தார் கருணாநிதி. 1939இல் சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தின் தலைவராக இருந்தார். தலைமை குணம் அப்போதே பிறந்துவிட்டது.
பேசுவதையும் எழுதுவதையும் படிப்பதையும் அதிகரித்துக் கொண்டார். சிறுவர் சீர்திருத்தச் சங்கம் இளைஞர் சங்கங்கள் முளைத்தது. திராவிட நாடு இதழில் கருணாநிதியின் கட்டுரைகள் பிரசுரமாக அது மேலும் உற்சாகத்தை கொடுத்தது. நாடகம் ஒன்றே அன்று பொழுதுபோக்கு அதில் தனது கொள்கை கருத்துக்களை புகுத்தினார். மாணவ நேசன் ஏட்டினை ஏழெட்டு மாதங்கள் கையாலேயே எழுதி வழங்கினார். இதன் தொடர்ச்சியாய் 1942ல் முரசொலி வெளியீடு துவங்கியது. இறுதி வகுப்புத் தேர்வில் மூன்று முறை முயற்சி செய்தும் தோல்வியுற்றார். அதற்குப் பிறகு வாய்ப்பு இல்லை என அறிந்து விட்டது தொல்லை என பெருமூச்சு விட்டார்.
முதல்வர் நாற்காலியில் அமர்வதற்கு ஏட்டுக்கல்வி ஒன்று இருந்தால் மட்டும் போதாது என்பதை அவர் அன்றே அறிந்து வைத்திருந்தார். கிழவன் கனவு எனும் தனது முதல் புத்தகத்தை எழுதி முடித்தார். கொள்கை, அரசியல் என சுற்றித் திரிந்து வந்த இளைஞன் பெற்றோர் அறிவுரையால் 1944 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 13-ஆம் நாள் பத்மாவை கரம்பிடித்தார். குடும்பத்தை நடத்த நாடக நடிகரானார். பெரியாரின் ஈரோட்டு குடியரசு அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். சில நாட்களுக்குப் பிறகு 1948ல் பத்மாவை பறி கொடுத்தார் கலைஞர். அதே ஆண்டில் தயாளுவை மணந்தார்.
1946 ஆம் ஆண்டு கருணாநிதியின் திரை உலக வாழ்க்கை துவங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சி நாடகத்தை சினிமாவாக மாற்றியது. நாடகத்தில் செய்ய நினைத்ததை சினிமாவிலும் செய்யத் தொடங்கினார். சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விடாப்பிடியாக தொடர்ந்தார். திரைப்படத்துறையை அரசியல் வேலைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என திட்டமிட்டு இருந்தார். இந்த திட்டமிடலை கருணாநிதியின் அரசியல் அடித்தளம். இதுவரை 75 திரைப்படங்களுக்கும் மேலாக திரைக்கதை எழுதியுள்ளார். பல நாடகங்களையும் புத்தகங்களையும் படைத்துள்ளார்.
கதை-வசனம் எழுதும் கதைகளுக்கும் மட்டும் பாடல் எழுதினார். பாடல் பாடுவதைக் கேட்டு கை தட்டும் வழக்கத்தை மாற்றி கதை வசனங்களை ஒப்பிப்பது புகழாக மாற்றினார். இவரின் வசனங்களை பேசுவதை பெருமையாக கொண்டார்கள் மக்கள். சினிமா பயணம் ஒருபுறம் அரசியல் பயணம் மறுபுறம். டால்மியாபுரம் என்ற பெயரை கல்லக்குடி என்று மாற்றுவதற்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் கைதாகி 6 மாதம் சிறை வைக்கப்பட்டார். தனது 33-வது வயதில் 1957 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் குளித்தலை தொகுதியில் நிறுத்தப்பட்டார். வெற்றி பெற்று கழகத்தில் இருந்து 15 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
முதன்முதலாக சட்டமன்றத்தில் நுழைந்தார் 1964ல் கருணாநிதி அமைத்த முத்துவேலர் அஞ்சுகம் சேய் நல விடுதியினை முதல்வர் பக்தவச்சலம் திறந்து வைத்தார். 1965 மொழிப் போராட்டத்தால் கருணாநிதி மீது இந்திய பாதுகாப்பு சட்டம் பாய்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1967 தேர்தலில் சைதாப்பேட்டையில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பொதுப்பணித்துறை அமைச்சரானார். அண்ணாவின் பின்னடைவோ கலைஞரின் செல்வாக்கோ எம்ஜிஆர் கொடுத்த ஆதரவோ இல்லை இவை அனைத்தும் சேர்ந்தோ கருணாநிதியின் பெயரை கழகம் முழுவதும் இட்டு நிரப்பியது.
புதிய அமைச்சரவை பதவி கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் கருணாநிதி. துவக்கத்தில் நட்பு பாராட்டிய எம்ஜிஆர் பின்னாளில் விலகினார். 1975 ஜூனில் பிரதமர் இந்திரா காந்தி வென்ற தேர்தல் செல்லாது என அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அவசரநிலை அறிவிப்பைக் கண்டித்து இந்திராகாந்தி நடவடிக்கைகளை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது திமுக. இதனால் 1976 ஆட்சியை பறிகொடுத்தார் கலைஞர். பல நெருக்கடிகளை சந்தித்தார்.
எம்ஜிஆரின் திரைப்பயணம் ஆட்சி அதிகாரமாக மாற்றியது மேலும் பிரளயத்தை உருவாக்கியது. கட்சி நடத்துவதே கடினமானது. மனம் தளராமல் திரையில் தடம் பதித்தார். 1989 தேர்தலில் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அடுத்தடுத்த தேர்தல்களில் ஜெயலலிதாவோடு போட்டி போட வைத்தது. அன்றும் இன்றும் அரசியலில் கருணாநிதியை கண்டு வியக்காதவர்கள் இல்லை. ஆனால் பிற்கால அரசியல் நகர்வுகளில் கருணாநிதியின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளால் அளவுகடந்து விமர்சனங்களுக்கு உள்ளானார். குடும்ப நபர்கள் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களையும் அரசியல் நடவடிக்கைகளால் ஏற்பட்ட விமர்சனங்களையும் கருணாநிதி எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.
பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக எதிர்த்த கருணாநிதி பிற்காலத்தில் அதனுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பொது மக்களின் குறிப்பாக ஊடகங்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. 2008-2009ல் இவரது ஆட்சியின்போது ஈழத் தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவன் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காததற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதே காலப்பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள் .
கருணாநிதி மீது கடுமையான விமர்சனங்கள் வைப்பவர்கள் கூட மாற்றுக் கொள்கை உடையவர்களுடன் நட்பு கொள்ளும் கருணாநிதியின் தன்மையினையும், தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் ஜனநாயகத்தை முடிந்த அளவு பின்பற்ற முயற்சி செய்ததையும் கண்டு வியப்பார்கள். எந்த பின்புலமும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து இப்படியான உயர்ந்த இடத்தில் அவர் வந்ததற்கு அவர் கொடுத்த விலை நிச்சயம் சாதாரணமானதல்ல என்பதை உணரமுடிகிறது.
தனது வாழ்வில் எண்ணிலடங்கா சாதனைகளையும் அதற்கு சமமாக சோதனைகளையும் சந்தித்தவர் கருணாநிதி. சோதனைகளை சந்தித்தாலும் உழைப்பிலும் உற்சாகத்திலும் போராட்டத்திலும் கருணாநிதி அவர்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதே இல்லை. வெற்றிகளையும் தோல்விகளையும் சரி சமமாக பார்க்கும் குணம் கொண்ட கருணாநிதி அவர்கள் எழுத்தால் பேச்சால் திரைப்படங்களால் இலக்கியத்தால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றார்.