வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987ல்) திருத்தும் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த ஒரு விற்பனை கூடங்களிலும் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட கிடங்குகள், குளிர்பதன கிடங்குகளிலும் விற்பனை செய்து கொள்ளலாம். இதனால் தங்கள் விலை பொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்று பயனடையும் வகையில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சந்தைகளிலும் விவசாயிகளிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என கூறப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் அவசர சட்டம் குறித்து பேசிய வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங், விவசாயிகள் நேரிடையாக பயனடையும் வகையில் இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு விற்பனை கூடங்கள் மட்டுமின்றி தனியார் கூடங்களிலும் விளை பொருட்களை கட்டணமின்றி விற்பனை செய்யலாம். மேலும் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.