சரியான முறையில் சிகிச்சை அளிப்பதன் காரணமாக அதிகமானோர் குணமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கு அனைத்து வகைகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. நாளொன்றுக்கு 13,000 பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மாநகராட்சியில் 4000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகின்றது. யாருக்காவது பரிசோதனையில் தொற்று இருக்கின்றது என்று கண்டறியப்பட்ட உடன் அவர்கள் யார் யாராரிடமெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்று கண்டறியப்பட்டு அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்த படுகிறார்கள்.
குணமடைந்தவர்கள் வீதம்:
பரிசோதனையில் தொற்று ஏற்பட்டிருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனடிப்படையில் இதுவரை 23 ஆயிரத்து 495 பேருக்கு தமிழகத்தில் இன்றைக்கு தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். இதில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 170 பேர். சுமார் 56 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை 138 பேர். அதேபோல இறந்தவர்கள் எண்ணிக்கை 184 பேர்.
அச்சம் அடைய வேண்டாம்:
சரியான முறையிலே நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்ததன் விளைவு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 56 சதவீதம் இருக்கிறது. இந்தியாவிலேயே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணக்கீடும் போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நமக்கு தான் அதிகமா இருக்குது. அதே போல இறப்பு சதவீதம் விகிதம் குறைந்திருக்கிறது. சுமார் 0.80 தான் இறந்தவர்கள் எண்ணிக்கை இருக்கு. அதனால நாம் அச்சப்பட வேண்டியதில்லை. பாதிக்கப்பட்டவர்களை உரிய முறையில் சிகிச்சை அளித்து நம்முடைய மருத்துவர்கள் குணமடையச் செய்து வீடுகளுக்கு திரும்ப அனுப்புகின்றனர்.
அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைக்கின்றது:
அதே போல பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னைக்கு முழுமையாக கிடைக்கின்றன. சென்னை மாநகரத்தை பொறுத்தவரை பொதுவினியோக திட்டத்தில் வழங்கப்படுகின்ற அந்த உணவுப் பொருட்கள் தங்கு தடையில்லாமல் வழங்கபடுகிறது. ஏப்ரல் மாதம் அரிசி வாங்குகின்ற குடும்ப அட்டைதாரர் அனைவருக்கும் 20 கிலோ அரிசி, விலையேற்றி சர்க்கரை, பருப்பு, எண்ணெய் விலையில்லாமல் கொடுத்துள்ளோம். ஆயிரம் ரூபாய் நிதியும் கொடுத்தோம்.