பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளது.
நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.