அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினர் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், வெள்ளை இனவெறி வாதத்துக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பியும், அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் பல இடங்களில் கலவரமாக வெடித்துள்ளது. கட்டுக்கடங்காது செயல்படும் போராடக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டு வரக்காவல் துறையினர் திணறிவருகின்றனர். இந்நிலையில், விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த போராட்டம் குறித்து, அதிபர் ட்ரம்ப், மாகாண ஆளுநர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, “உங்களில் பெரும்பாலானோர் பலகீனமானவர்கள். கலவரத்தில் ஈடுபடுவோரை நீங்கள் கைது செய்ய வேண்டும். தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 10 வருடம் அவர்களைச் சிறையில் அடைத்தால், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது” எனச் சாடினார்.