முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த இரண்டு நாளாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுநிலை மருத்துவம் முடித்த ஆயிரம் மருத்துவர்கள் சென்னையின் பல்வேறு மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னையில் வேகமாக பரவி வரும் நிலையில் கூடுதலாக மருத்துவர்களை பணியில் அமர்த்த அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சென்னையில் மட்டுமே கூடுதலாக பணியமர்த்தப்பட்டவர்கள் மருத்துவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முதுகலை மருத்துவப் படிப்பு படித்தவர்கள். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்பு படித்த இவர்களுக்கு மருத்துவ படிப்பு கடந்த மாதம் 15ம் தேதியோடு நிறைவடைந்தது, தற்போது புதிய மாணவர்கள் (பேச்) 16ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்த சூழ்நிலையில் தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் அவர்களுக்கு தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் இருக்கக்கூடிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி புரிவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. எப்படியோ இக்கட்டான நேரத்தில் சரியான முடிவு எடுத்த தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.