புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அப்போது புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்துள்ளது. ரயில் கட்டண செலவை மாநிலங்களே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புலம்பெயந்த தொழிலாளர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக உணவு, அத்தியாவசிய சேவை, பேருந்து கட்டணம் என இதுவரை சுமார் ரூ. 163 கோடி செலவிடப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 212 முகாம்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன,
231 உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு 8,000 பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 3.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளோம், அவர்களுக்கென தனியாக இணையதளம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம் என்றும் மாவட்டம்தோறும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.