அமமுக வேட்பாளர்கள் அனைவரும் 2 -3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக வேண்டுமென்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் TTV. தினகரன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . அறிவிப்பு வெளியாகியதும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் கூட்டணி வியூகங்களை வகுக்க ஆரம்பித்து கூட்டணியை முடிவு செய்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணி , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து கட்சி வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால் அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்ன வழக்கு நிலுவையில் இருந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் அமமுக_விற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்றும் , அமமுக சார்பில் போட்டியிடும் 59 வேட்பாளர்களுக்கும் ஒரே சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அமமுக முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் TTV . தினகரன் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார் . இதில் நாடாளுமன்ற மற்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தனித்தனியே தொலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் 2 – 3 மணிக்குள் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.