திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை கொரோனா சிகிச்சை பெற்றுவரும் அன்பழகனுக்காக ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் உடல் நலம் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
ஒன்றிணைவோம் வா:
‘ஒன்றிணைவோம் வா’என்ற செயலாக்கத்தின் வழியாக 28 லட்சம் உணவு தொகுப்புகள், 76 லட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 லட்சம் முகக் கவசங்கள் – கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. 18 லட்சம் உதவி அழைப்புகள், 36,100 நல்லோர்கள் – 230 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட பெரும் பணிக்குப் பிறகு ஆட்சியாளர்கள் மட்டுமே தீர்வு காணக்கூடிய கோரிக்கை அடங்கிய 7 லட்சம் மனுக்கள் அரசாங்கத்திடம் அளிக்கப்பட்டன.
பலநாட்கள் 24 மணிநேரமும் கடுமையாக உழைத்து நிறைவேற்றிய உடன்பிறப்புகளை தொடர்புகொண்டு உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துவது என் வழக்கமாக அமைந்திருந்தது.
ஜெ அன்பழகன்:
”நீங்க பாதுகாப்பா இருங்க…. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்வது ஜெ.அன்பழகன் வாடிக்கை. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் – அதிக அலைச்சல் கூடாது என்பதை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தேன்.
அவரோ பாரம்பரியமான கழக ரத்தம் உடலில் பாய்ந்தோடுகின்ற உடன்பிறப்பு. மிசா சிறைக் கொடுமைகளை எதிர்கொண்ட பழக்கடை ஜெயராமன் அவர்களின் புதல்வர். தந்தை எட்டடி என்றால், தனயன் 16அடி என்ன, அதற்கும் மேல் பாய கூடியவர்கள்.
எதையும் மறைக்காமல் இயல்பாக பேசக்கூடியவர். உடன்பிறப்புக்கூறிய உரிமை அந்த குரலில் இருக்கும். அதில் உள்ள செய்தியோ இயக்கத்தின் நலன் கருதியதாக இருக்கும்.
தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையால் 45 சதவீதம் அளவிற்கு செயற்கை சுவாசம் என்கின்ற மெலிதான முன்னேற்றம் ஏற்பட்டு, தொடர்ந்து சீரான நிலையில் இருப்பதை மருத்துவர் இளங்குமரனும், எம்பி ஜெகத்ரட்சகனும் தெரிவித்தனர்.
சளைக்காத போராளியான சகோதரர் ஜெ.அன்பழகன் அவர்கள் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை உங்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! கழகத்தின் கடைக்கோடி உடன்பிறப்பு வரை அதே உணர்வு வெளிப்படுவதை சமூக வலைதளங்கள் வாயிலாக காண்கிறேன்.
என் அன்பு கட்டளை:
ஒரே குடும்பம் என்கின்ற உணர்வு – இதுதான் இந்த இயக்கத்தின் வலிமை. குடும்பத்தின் தலைமை உடன்பிறப்பு என்ற பொறுப்பில் உங்களில் ஒருவனாக நான் பணியமர்த்தப்பட்டு இருக்கிறேன். அந்த உரிமையுடன் உங்களுக்கு நான் வைக்கின்ற வேண்டுகோள் – அன்பு கட்டளை ஒன்றே ஒன்றுதான் – ஒவ்வொரு உடன்பிறப்பின் உயிரும் முக்கியமானது; அதற்கு உடல் நலனை பாதுகாத்திட வேண்டும்.
பொது மக்கள் நலனைக் காத்திடும் ஜனநாயகத்தில் தொடர்ந்து இயங்கும் அதே நேரத்தில் உங்கள் ஒருவரை நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தினரின் நலனையும் மனதில் கொள்ளுங்கள்.
வயதில் மூத்த உடன் பிறப்புகள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சர்க்கரை – இரத்த அழுத்தம் – சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் வீட்டிலேயே இருக்க வேண்டியது கட்டாயம். அதனை ஒருபோதும் மீற வேண்டாம். உடல் நலன் பேணுங்கள், துளியளவும் அலட்சியம் காட்டிட வேண்டாம் என அன்புக் கட்டளை இடுகிறேன் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சளைக்காத போராளியான சகோதரர் @JAnbazhagan அவர்கள் விரைந்து நலன் பெற்று வரும் நாளினை உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்!
தலைமை உடன்பிறப்பாக உரிமையுடன் உங்களுக்கு நான் இடும் அன்புக்கட்டளை ஒன்றே ஒன்றுதான்- உடல் நலன் பேணுங்கள். துளியளவும் அலட்சியம் வேண்டாம்! pic.twitter.com/Hvaq0JPxnu
— M.K.Stalin (@mkstalin) June 5, 2020