மத்திய அரசின் செலவுகளை கட்டுப்படுத்த புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத.
கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவை தடுத்து வளர்ச்சியை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் தற்போது, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மற்றும் புதிய திட்டங்களை அறிவிக்க தடை விதித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக வரிவசூல் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதே போல தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இதனை சரி செய்வதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். எனவே தான் மத்திய அரசு சிக்கன நடவடிக்கைக்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது, அதற்கான செலவினங்கள் இருக்கின்றன, சிறு குறு தொழில்கள் போன்றவற்றுக்கு குறைந்த வட்டியில் கூடுதல் கடன் அளிப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஆகவே பிரதமர் நரேந்திர மோதியின் கரீப் கல்யாண் யோஜனா திட்டம் மற்றும் ஆத்ம் நிர்பார் பாரத் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்களை தவிர புதிய திட்டங்கள் எதையுமே இனிமே அறிவிக்க வரவேண்டாம் என்றும், அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டாம் எனவும் நிதி அமைச்சகம் உத்தரவிட்டு இருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கன நடவடிக்கையாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.