சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக “ஒளிரும் மாநாடு” என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய முதல்வர் பழனிசாமி சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை, சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல தளர்வுகள் அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
25 சதவீத பணியாளர்களுடன் செயல்பட நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். பணியாளர்கள் உடல் நலம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தொழில் முதலீட்டை மேம்படுத்துவற்கான சாதகமான சூழல் வரும் காலங்களில் அதிகரிக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் பல நாடுகளில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயரும். அவ்வாறு இடம்பெயரும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை காப்பது போன்றவை அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது என அவர் தகவல் அளித்துள்ளார்.