சென்னை நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை 15 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் 1,116 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 10,156 பேர் குணமடைந்துள்ள நிலையில் 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் இன்று முதல் கூடுதலாக ஆயிரம் மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், அன்பழகன், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.