இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் கொரோனா பரிசோதனை செய்தால் அமெரிக்காவை விட பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் ஏறக்குறைய 19 லட்சம் கொரோனா பாதிப்புகளையும் 1,09,000 மேற்பட்ட இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே போல இந்தியாவில் 2,36,184 பேருக்கு கொரோனா பாதிப்பும் மற்றும் சீனாவில் 84,177 பேருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுவரை அமெரிக்காவில் 2 கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது ஜெர்மனியில் 40 லட்சம் பரிசோதனைகளையும், தென்கொரியாவில் 30 லட்சம் பரிசோதனைகளையும் செய்துள்ளனர். இதேபோல இந்தியா, சீனா போன்ற நாடுகளிலும் அதிக பரிசோதனைகளை செய்தால் அமெரிக்காவை விட கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.