பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேவையான பேருந்துகளின் எண்ணிக்கை, வழித்தட விவரங்கள் வரும் 8ம் தேதி பகல் 3 மணிக்குள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இ-பாஸ் முறையில் அழைத்து வருவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.