அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வர வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை திறக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை பொறுத்தவரை, முதல்வர் தலைமையில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும், ஜூன் 15ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், அனைத்து ஆசிரியர்களும் நாளை பள்ளிக்கு வரவேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.