தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி தேவலாவில் 13செ.மீ மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் கன்னியாகுமரி குளச்சல் பகுதியில் தலா 8 செ. மீ மழையும், சிவகங்கை மாவட்டம் இல்லையான்குடியில் 5 செ.மீ மழையும், கன்னியாகுமரியில் இரணியல், காமாட்சிபுரம் பகுதிகள், நீலகிரியின் கூடலூர் பஸார், திருச்சி விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை குடுமியான்மலை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை:
லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கும் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும். எனவே ஜூன் 10ம் தேதி முதல் 11ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.