1,650 வடமாநில தொழிலாளர்கள் 3 ரயில்கள் மூலமாக அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களது சொந்த மாநிலங்களுக்கு ஏராளமானோர் அனுப்பிவைக்கப்பட்டு மேலும் சொந்த மாநிலம் செல்ல விரும்புவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 450 பேர் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்து 200 பேர் நேற்று அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க அவர்களுக்கான டோக்கன் வழங்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில் அவர்களது பெயர் மற்றும் முகவரி சரிபார்க்கப்பட்டு ஈரோடு மல்லிகை அரங்கம், மாநகராட்சி திருமண மண்டபம் போன்ற இடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து அவர்களை ரயிலில் அனுப்பி வைக்கும் பணியில் ஈரோடு தாசில்தார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். முதலில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 500 தொழிலாளர்கள் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு சமூக இடைவெளி பின்பற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.
அதேபோன்று மாலை 6 மணிக்கு திருப்பூரில் இருந்து ஒடிசா செல்லும் ரயிலில் 150 தொழிலாளர்கள் ஈரோட்டிலிருந்து ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர் . மேற்கு வங்காளம் போக இருந்த ரயிலில் ஈரோட்டில் இருந்து 700 பேர் அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து நேற்று மட்டும் ஈரோட்டில் இருந்து மூன்று ரயில்கள் மூலமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 1,650 பேர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.