காஷ்மீர் எல்லையான சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே, ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று காலை முதல் அந்த மாவட்டத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, ரெபன் பகுதியில் இன்று காலை அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்த 3 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தினர். அதில், மேலும் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனால், இன்று காலை முதல் நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் கங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை காலை பாதுகாப்பு படையினருடனான மோதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழு ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் இணைந்த மூன்று பயங்கரவாதிகள், ஐ.இ.டி நிபுணர் உட்பட 4 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.