காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன் பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
தலைமறைவான காதலி மற்றும் குடும்பத்தினர் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே வாலிபர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்பதால் தனிப்படை காவல்துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அன்பழகன் காதலி மற்றும் குடும்பத்தினர் வெளியூர் செல்வதற்காக ரயில்வே பீடர் சாலையில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்க அதன் அடிப்படையில் அங்கு விரைந்த அதிகாரிகள் அன்பழகனின் 16 வயது காதலி, 17 வயது அண்ணன் மற்றும் அவர்களது தாய் தந்தை ஆகியோரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் காதலியின் குடும்பத்தினர் திட்டம்போட்டு அன்பழகனை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்த அன்பழகன் மாணவிக்கு செல்போன் மற்றும் வீட்டு டிவிக்கு ரீசார்ஜ் என தொடர்ந்து செய்து வந்த நிலையில், மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர, கண்டித்ததோடு சில வாரங்களுக்கு முன்பு மாணவிக்கும் வீட்டில் இருந்தவர்களே ரீசார்ஜ் செய்து உள்ளனர். இதையறியாத அன்பழகன் காதலியிடம் டிவிக்கும் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய போவதாக கூற,அதற்கு அவர் நாங்கள் வீட்டிலேயே செய்து விட்டோம் எனக் கூறியதால் கோபம் கொண்ட வாலிபர் மாணவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் பெற்றோர்களிடம் முறையிட்டு அழுததால் ஆத்திரம் கொண்ட பெற்றோர் அன்பழகனை கொலை செய்வதற்கு முடிவு செய்து மாணவி மூலமாக அன்பழகனை வீட்டிற்கு வரவழைத்து மாணவியின் அண்ணனான 17 வயது சிறுவன் அன்பழகனின் தலையில் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட, மாணவியும் பெற்றோரும் சடலத்தை மறைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வெளியில் ஆள்நடமாட்டம் அதிகம் இருந்ததால் வீட்டிலேயே சடலத்தை போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்தபோது தனிப்படை காவல்துறையினர் அவர்களை கைது செய்து 16 வயது மாணவியும் 17 வயது அண்ணனும் சீர்திருத்த பள்ளியிலும், தாய், தந்தையினரை மத்திய சிறையிலும் அடைத்தனர்.