தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த ஜெயபாரதி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விவரம்:
தமிழகத்தில் வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும்போது உரிய கொரோனா தடுப்பு வழிமுறைகளை வகுக்கக்கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜெயபாரதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன. எனவே, அதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக தற்போது வரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், தற்போது வரை வழிபாட்டுத் தலங்களை திறப்பது குறித்து அரசு முடிவு எடுக்காத நிலையில் மனு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக்கூறினர்.
இதனால் இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கே ஏராளமான கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதுபோல வழிபாட்டு தலங்களை திறக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக்கூறி நீதிபதிகள் தற்போது எவ்விதமான உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.