சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க நியமித்த குழுவில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
தண்டையார் பேட்டை மண்டலத்தில் ஒருங்கிணைப்பு பணிக்காக அமைச்சர் பாண்டியராஜனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், காமராஜ், வேலுமணி என 5 அமைச்சர்கள் இந்த குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சற்று முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் அதில் மண்டலவாரியாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை அமைச்சர்கள் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இல்லை என கூறுவது முற்றிலும் தவறு எனக் கூறியுள்ளார். இதற்கடுத்ததாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா தடுப்பு பணிகளை மண்டலவாரியாக அமைச்சர்கள் மேற்கொள்ள உள்ளனர். மேலும் இது தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.