மின்சார கம்பியால் கண்டெய்னர் லாரியில் பற்றிய தீ 2 வாகனங்களுக்கு பரவ தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் அவரது கண்டெய்னர் லாரி பழுதடைந்ததால் சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் இருக்கும் வாகன பழுது நீக்கும் கடைக்கு நேற்று மாலை கொண்டு சென்றுள்ளார். வாகனத்தை கடையில் நிறுத்திய சமயம் கடையின் மேலே இருந்த உயர் அழுத்த மின்சார கம்பி கண்டெய்னர் மேல் உரசியதால் லாரியில் மின்சாரம் பரவி டயரில் தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனால் ஓட்டுநர் உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினார். கொழுந்துவிட்டு எரிந்த தீ அருகில் இருந்த மற்றொரு லாரியிலும் இரண்டுக்கும் இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கும் தீ பரவ, மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளது. திடீரென ஏற்பட்ட விபத்தினால் அதிர்ச்சி அடைந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் மூன்று வாகனங்களிலும் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தும் கண்டெய்னர் லாரியின் முன் பகுதியும் மோட்டார் சைக்கிளும் லாரியும் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.