10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, ” இன்று மதியம் 10ம் வகுப்பு தேர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள். அரசின் முடிவில் மாணவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது.இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இருப்பதால் நேற்று தேர்வுகள் நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இன்று முதல்வரோடு ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார். இது தொடர்பாக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.