10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றுகிறார்.
பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் முதல்வர் உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடத்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. மேலும், தேர்வு மையங்களுக்கு மாணவர்களை இ-பாஸ் முறையில் அழைத்து வருவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்வுகள் நடத்துவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் பொதுத்தேர்வு குறித்து முக்கிய செய்திகளை வெளியிடவுள்ளார். இந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வினை ரத்து செய்வதாக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரையாண்டு மற்றும் காலாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் ஆல்பாஸ் செய்யப்படுவார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளார்.