Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? நீதிமன்றம் கேள்வி!

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிக்க வேண்டிய கட்டண விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்குரூ.15,000 வரை கட்டணம் வசூலிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும், ஆனால் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் மத்திய அரசையும் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள்,

கொரோனா தொற்று சிகிச்சைக்கு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் குறித்தும், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்குமா? என்பது குறித்தும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |