மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ள நிலையில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12ம் தேதி காலை 10 மணிக்கு முதலமைச்சர் நேரில் சென்று அணையை திறக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேட்டூர் அணையில் ஆட்சியர் ராமன், சார் ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.7 67 அடியாக உள்ளது, நீர் இருப்பு 67 டிஎம்சி, நீர் வரத்து 1,451 கன அடி, குடிநீர் தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது போதிய தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு அணை திறக்கப்பட உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.