எஜமான் தற்கொலை செய்து கொண்டதை அறியாத நாய் அவர் வருகையை எதிர்பார்த்து நான்கு நாட்களாக காத்திருந்த சம்பவம் பார்ப்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீனா வூஹான் நகரில் இருக்கும் யாங்சே என்ற பாலத்தில் இருக்கும் நதியில் கடந்த 30ஆம் தேதி ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்டவருடன் அவர் வளர்த்த செல்ல பிராணியான நாயும் வந்துள்ளது. இந்நிலையில் எஜமான் தற்கொலை செய்து கொள்ள அதை அறியாமல் அவரது வருகைக்காக கடந்த 4 நாட்களாக பாலத்தின் நடை பாதையிலேயே அந்த நாய் காத்துக்கொண்டு இருந்துள்ளது.
இதனைப் பார்த்த சூ என்பவர் அதனை புகைப்படம் எடுத்ததோடு அந்த நாயை தத்தெடுக்க விரும்பி பிடிக்க சென்றுள்ளார். ஆனால் அது அவரிடம் சிக்காமல் தப்பி ஓடி உள்ளது. பின்னர் மீண்டும் எஜமானை தொலைத்த பாலத்தில் வந்து நின்றது. அவர் எடுத்த புகைப்படம் மற்றும் காணொளி காட்சிகள் வூஹான் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் இயக்குனர் பார்வைக்கு வர உள்ளூரில் இருக்கும் தன்னார்வலர்களின் உதவியோடு அந்த செல்லப்பிராணியை தேடத் தொடங்கியுள்ளனர்.
இதனையடுத்து நாயின் எஜமான் தற்கொலை செய்து கொண்ட நாள் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள பாலம் அதிகாரியிடம் கேட்டபோது, அன்று மிகவும் இருட்டாக இருந்ததால் கண்காணிப்பு கேமராவில் எதுவும் தெளிவாக பதிவாகவில்லை. ஆனால் அவர் குதிப்பது மட்டும் கேமராவில் பார்க்க முடிந்தது. எஜமானுக்காக கடந்த 4 நாட்களாக காத்திருக்கும் இத்தகைய விசுவாசமான நாயின் நிலை வருத்தத்தை கொடுக்கிறது. அதனை பராமரிக்கும் உரிமையாளரை வெகுவிரைவில் கண்டுபிடிப்போம் என்றே நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.