சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு வழங்கிடும் எனவும் உறுதியளித்துள்ளார். உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்க்க, அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வகையில் ஏற்கனவே தலைமை செயலாளர் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.
குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை கண்டறிந்து அந்த நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய ஈர்க்கும் வகையில் அந்த குழு செய்லபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், தொழிற்துறை வல்லுநர்கள், பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகளுடன் இந்த குழு ஆலோசனை நடத்தியது.
அதன் காரணமாக அண்மையில் ரூ.15,128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு 8 முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.