சீரக குடிநீரை வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராயபுர மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுவரை 4207 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதித்த 2274 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 54 பேர் உயிரிழந்த நிலையில் 1879 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
ராயபுர மண்டலத்தில் இதுவரை முகக் கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர் குழு என்ன சொல்கின்றதோ அவர்களின் பரிந்துரைப்படி தான் முழு ஊரடங்கு அமல்படுத்த முடியும். தமிழகத்தில் சமூக தொற்று இல்லை என முதலமைச்சர்க்கு விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது. மாவட்டம் வாரியாகவும், மண்டலம் வாரியாகவும் கொரோனா பாதிப்பு குறித்து தகவல்களை தெரிவித்து வருகின்றோம். இறப்பு விகிதத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 5 நாள் சீரக குடிநீரை மக்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.