திருச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்த குண்டுர் பர்மா காலனி தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் திருவெரும்பூர் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சவுண்ட் சர்வீஸ் செய்து தரும் கடையை நடத்தி வருகிறார். சுபநிகழ்ச்சிகளுக்கு தனது கடைகள் மூலம் மைக், சவுண்ட் செட் அமைத்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார். அதேபோல் ஜெனரேட்டர்களை வாடகைக்கு விடுவார்.
அதன்படி, நேற்று நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் மின்சாரம் இல்லாததால் ஒருவரது தோட்டத்திற்கு தண்ணீர் ஏற்றுவதற்காக ஜெனரேட்டரை எடுத்துச் சென்று இயக்கியுள்ளார். அப்போது மின் தடை ஏற்பட்டு பின் திடீரென வரவே, ஜெனரேட்டரை நிறுத்த முயற்சித்துள்ளார் ஸ்ரீதர். அப்போது எதிர்பாராதவிதமாக இவரை மின்சாரம் தாக்க, ஸ்ரீதர் தூக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு நாவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர்.
பின் அங்கு உள்ளவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு தூக்கி செல்லுமாறு வலியுறுத்தவே, அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது தொழிலே இது தான். இதற்கு முன் பலமுறை இதுபோன்ற வேலைகளில் அவர் ஈடுபட்டிருப்பார். இந்த முறையும் கவனமாக வேலை பார்த்த போதிலும் இப்படி ஒரு விபத்து நிகழ்ந்து அவரது உயிரை காவு வாங்கியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.