பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த சரண்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
வழக்கு விவரம் :
அந்த மனுவில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்கள் முயற்சிக்கும் போது, பல ஆபாச விளம்பரங்கள் மற்றும் இணையதளங்கள் அவர்களின் கவனத்தை திசை திரும்புவதாக இருப்பதாகவும், இதனால் தேவையற்ற கவனச்சிதறல் மாணவர்களுக்கு உருவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 8% வீடுகளில் மட்டுமே இணையதள வசதிகள் மற்றும் கணினி வசதிகள் உள்ளது, முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். எனவே ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த விதிகள் வகுக்கும் திட்டம் உள்ளதா? என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து இரண்டு வாரங்களில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.