கொரோனாவால் மலையாள நடிகர் மரணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்
உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த 2.66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். கேரள அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி வரும் சூழலில் கேரளாவை விட்டு வெளியில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த 5 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
அவர்களில் கேரளா மாநிலம் ஆலுவா அருகே இருக்கும் சங்கரன்குழியை சேர்ந்த எஸ்.ஏ.ஹாசன் துபாயில் டெக்ஸ்டைல் தொழில் செய்து வந்துள்ளார். இவர் தொழிலதிபர் மட்டுமல்லாது மலையாளப் படமான ஹலோ துபாய்க்காரனை தயாரித்து நடிக்கவும் செய்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எஸ்.ஏ.ஹாசன் சார்ஜாவின் ரஸ் அல் ஹைமா பகுதியிலிருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தி அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு செயற்கை சுவாச கருவி மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணத்தால் அவர் மனைவி மற்றும் 3 குழந்தைகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.