இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை செயலாளர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ஜூன் 6ம் தேதி தொடங்கியது. மால்டோ எனும் பகுதியில் இந்திய, சீன இடையே லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை சீனா திரும்பப்பெற உள்ளதாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து நேற்று லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா படைகள் சுமார் 2.5 கி.மீ தூரம் பின்வாங்கியது. இதனால் எல்லையை சற்று பதற்றம் தணிந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா – சீனா எல்லையில் அமைதி திரும்ப இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது என சீன வெளியுறவுத்துறை தெரிவித்தது. மேலும் ராணுவ, தூதரக ரீதியான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது என கூறப்பட்டுள்ளது.