ஆளுநரின் உத்தரவே பின்பற்றப்படும் என மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
டெல்லி அரசுக்கு கீழ் இயங்கி வரும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, நர்சிங் ஹோம்களின் உரிய ஆவணங்களை கொண்ட டெல்லி வாழ் மக்களுக்கு மட்டும்தான் சிகிச்சை கொடுக்கவேண்டும் என அதிரடியாக டெல்லி அரசு உத்தரவை பிறப்பித்தது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அந்த உத்தரவை ரத்து செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். இதனால் வெவ்வேறு உத்தரவுகளில் எதனை பின்பற்றுவது என்பதில் குழப்பம் உருவானது.
இந்நிலையில் ஆளுநரின் உத்தரவே பின்பற்றப்படும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறிய பொழுது “இது அரசியல் செய்யும் காலம் அல்ல. 62 தொகுதிகளை சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றினோம். ஒரு முடிவை மத்திய அரசு எடுத்துவிட்ட நிலையில் மாற்றுக் கருத்தை தெரிவிப்பதற்கான நேரம் இதுவல்ல. இந்த விவகாரத்தில் துணைநிலை ஆளுநரின் உத்தரவே நடைமுறைப்படுத்தப்படும். இதில் விவாதம் செய்வதற்கான எந்த ஒரு அவசியமும் இல்லை.
அரசியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டால் கொரோனா வெற்றி பெற்று விடும். கொரோனா தொற்றுக்கு எதிராக நடக்கும் இந்தப் போரில் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட வேண்டும். எங்களுக்கு இருக்கும் நெருக்கடியை யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. ஜூலை மாதத்தின் இறுதிக்குள் 5.5 லட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என அரசு கணித்துள்ளது.
பாதிக்கப்படுபவர்களுக்கான படுக்கை வசதிகளை தயார் செய்யும் பொறுப்பு மிகவும் சவால் நிறைந்ததாக உள்ளது. ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை செய்வதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூறினார். டெல்லியில் இதுவரை கொரோனாவினால் 31,309 பேர் பாதிக்கப்பட்டு 905 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.