திண்டுக்கல் பிரபல சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்களை மிரட்டி 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ரவிச்சந்திரன், சுகுமார் ஆகியோர் பிரபல அணில் சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர். இவர்கள் இரண்டு பேரையும் சென்ற மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்களில், இரண்டு பேர் புதுப்புது மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு அணில் சேமியா தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது எனவும், இதனை வெளியே கூறாமல் மூடி மறைப்பதற்கு தனக்கு ரூபாய் 50 லட்சம் தரவேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து பங்குதாரர்களாக இருவரும் திண்டுக்கல் மாவட்ட தலைமை காவல் நிலையத்தை தொடர்புகொண்டு, அளித்த புகாரின் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவு அளித்ததோடு, குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு இந்த வழக்கை மாற்றி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்,
அணில் சேமியா நிறுவனம் பங்குதாரர்களிடம் மிரட்டலில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த தொழில் அதிபர்களான சிவகுமார், ஸ்ரீதர் ஆகியோர் என தெரியவந்தது.இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.