கொரோனா உயிரிழப்பு தொடர்பான தகவல்களை மறைப்பதாக கூறப்படுவதால் எந்த உண்மையும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா உயிரிழப்பை எப்படி மறைக்க முடியும்?, உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் இல்லை என கூறியுள்ளார். இன்று சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன்பின் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்ப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை சுமார் 6.09 லட்சம் பேருக்கு தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்துள்ள மாநிலம் தமிழகம் தான் என கூறியுள்ளார். நேற்று மட்டும் சுமார் 17 ஆயிரம் பேரிடம் கொரோனா மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என தெரிவித்தார். நேற்று ஒரே நாளில் 1008 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
வேறு பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கொரோனா வந்த பிறகு அதிகம் உயிரிழந்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து குணப்படுத்துவதுதான் தமிழக அரசின் ஒரே நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார். சேலத்தில் மட்டும் சுமார் 2,000 படுக்கை வசதிகளுடன் கொரோனாவிற்கு சிகிச்சை ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 3,300 க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் போதுமான அளவு வெண்டிலேட்டர்கள் கைவசம் உள்ளன என தெரிவித்துள்ளார்.