கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்தால் பிரச்னை வராது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புதிதாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் அவர் அளித்த உரையில், சேலம் ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏவிஆர் பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விபத்துகளை குறைக்கவும், நெரிசல் இல்லாமல் பயணிக்கவும் சேலத்தில் அதிக பாலங்கள் கட்டப்படுகின்றன. இதுவரை இல்லாத வகையில் சேலம் மாவட்டத்தில் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த ஈரடுக்கு பாலத்தை திறப்பதன் மூலம் சேலத்திற்கு பெருமை கிடைத்துள்ளது என பெருமிதம் தெரிவித்தார். இது தவிர அவர் தந்து உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ” சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் எங்கும் சமூக பரவலாக கொரோனா உருமாறவில்லை என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளின் அறியப்பட்ட தொடர்புகள் மூலமாகவே கொரோனா பரவி வருகிறது என தெரிவித்தார்.
சென்னையில் குறுகிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வசிப்பதால் தொற்று எளிதாக பரவி வருகிறது. எனவே மக்கள் எங்கு சென்றாலும் சமூக இடைவெளியை பின்பற்றினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும் வெளியே சென்று வீடு திரும்புபவர்கள் கண்டிப்பாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.