அதிபர் ட்ரம்ப் விலக போவதாக கூறியிருந்தாலும் அமெரிக்க நிர்வாகிகள் எங்கள் அமைப்புடன் இணைந்தே செயல்படுகின்றனர் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்
உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஊதுகுழலாக செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக விமர்சனம் செய்தார். அதோடு சீனாவை காப்பாற்ற கொரோனா விவகாரத்தில் சுகாதார நிறுவனம் சரியாக செயல்படாததால் அந்த அமைப்பிற்கு அதிக அளவு நிதியை வழங்கி வரும் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகப் போவதாக தெரிவித்ததோடு அதற்கு வழங்கப்படும் நிதியும் நிறுத்தி வைக்கப்படும் என அதிபர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கூறுகையில், “அமெரிக்காவின் சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை செயலர் உலக சுகாதார அமைப்புடன் நல்ல தொடர்பில் இருந்து வருகின்றார்.
எபோலா நோய் காங்கோ பகுதியில் பரவியது பற்றி அவரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. அதிபர் ட்ரம்ப் சுகாதார அமைப்பில் இருந்து விலகப் போவதாக தெரிவித்திருந்தாலும், அமெரிக்க நிர்வாகிகள் அமைப்புடன் இணைந்து தான் செயல்படுகின்றனர். இப்போதிருக்கும் இந்த ஒற்றுமை இனி வரும் காலங்களிலும் தொடரும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்