மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றதையடுத்து, அவர் அங்கு தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுண்டக்காமுத்தூரில் இருக்கும் சுடுகாட்டில், வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்க ஆளில்லாமல் தனிமையில் கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இரக்கத்துடன் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று தினமும் உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதனை பார்த்த த.மு.மு.க. மருத்துவ அணி செயலாளர் முகமது ஆசிக் என்பவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மூதாட்டியிடம் பேச்சுக்கொடுத்தார்.. ஆனால் பாவம் அவரால் பேச கூட முடியவில்லை. மேலும் அவரது தலையில் காயமிருந்ததும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு த.மு.மு.க தன்னார்வ அமைப்பினர் கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டியின் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மூதாட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் மருத்துவர்கள் உறுதி செய்தனர்..
அதன்பின்னர் மூதாட்டியை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்ப்பதற்காக பல இடங்களுக்கு சென்று பார்த்தனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக யாருமே மூதாட்டியை சேர்க்க முடியாது என மறுத்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்துக்கு அந்த மூதாட்டியை அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றார். அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்த 60 வயதுடைய விஜயா என்பதும், அவரை குடும்பத்தினரே சுடுகாட்டில் தவிக்க விட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.. கோவையில் மூதாட்டியை குடும்பத்தினரே சுடுகாட்டில் தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித நேயம் மறைந்து போனதை எடுத்து காட்டும் விதமாக இந்த சம்பவம் இருக்கிறது.