மாநில அரசு டெல்லியில் சமூக பரவல் இருப்பதாக கூறியதை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. புதிதாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுகின்றது. அதிலும் டெல்லியில் 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இனி வரும் 10 நாட்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்றும் இந்த மாதத்தின் இறுதிக்குள் ஐந்தரை லட்சத்தை தாண்டும் என்றும் டெல்லி அரசு கணித்துள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் கூறுகையில் மக்களுக்கு கொரோனா தொற்று யார் மூலமாக பரவியது என்று தெரியாத நிலையில், நாங்கள் அதனை சமூக பரவல் என்று கூறுகிறோம். டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று யார் மூலமாக பரவியது என்பதை கண்டறிய முடியவில்லை. டெல்லியில் சமூக பரவலால் ஏற்பட்டிருப்பதாக எய்ம்ஸ் இயக்குனர் குலேரியா கூறுகின்றார்.
ஆனால் மத்திய அரசு அவரது கூற்றை ஏற்க மறுக்கின்றது. சமூக பரவல் என்பது துறை ரீதியான சொல் அதனை எங்களால் அறிவிக்க முடியாது. மத்திய அரசுதான் அதனை அறிவிக்க வேண்டும் எனக் கூறினார். டெல்லி அரசின் இந்த கருத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மறுத்ததோடு கழகத்தின் இயக்குனர் பல்ராம் பார்கவா கூறுகையில் “சமூக பரவல் பற்றிய விவாதம் தற்போது அதிகமாக உள்ளது. ஆனால் இதுவரை சமூக பரவல் என்றால் என்ன என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
நாட்டில் கொரோனா தொற்று குறைவாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்களுக்குதான் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நகரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதை விட அதிகமாக உள்ளது எனவே சமூக பரவல் என்பது இந்தியாவில் இல்லை என்று உறுதியாகக் கூறலாம் என கூறினார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை கடந்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 798 ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் இருக்கும் குடிசை பகுதிகளில் சமூக இடைவெளி என்பதை பின்பற்ற முடியாது. அறிகுறி இல்லாதவர்கள் பற்றிய தெளிவான விழிப்புணர்வும் இங்கு இல்லை. மும்பையில் சமூக பரவல் ஏற்பட்டு விட்டதாகவே நான் கருதுகிறேன் என தாராவி பகுதியில் பணிபுரிந்து வரும் மருத்துவரான திலீப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
ஆனால் மத்திய சுகாதாரத்துறை இந்தியாவில் சமூக பரவல் என்ற கருத்தை முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை உயர் அலுவலர் கூறுகையில், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை முறையாக கண்டறியாவிட்டால் யாரிடமிருந்து தொற்று வந்திருக்கும் என்பதை அறிந்து கொள்வதில் சிக்கல் உருவாகும். இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.