கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டன. ஆலோசனையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிரதிநிதிகளிடம் கூறியதாவது, இனிவரும் நாட்களில் கொரோனா பரிசோதனை மையங்களில் கொரோனா இருக்கின்றதா என்று பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவருமே கட்டாயம் 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள். சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற 12 அரசு பரிசோதனை மையமும், 18 தனியார் பரிசோதனை மையமும் இருக்கின்றன.
பரிசோதனை மேற்கொள்பவரின் பெயர்,முகவரி,வயது,பாலினம்,தொலைபேசி எண்,தொழில் விவரம், குடும்பத்தை பற்றிய தகவல்கள் போன்றவை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ஐ.சி.எம்.ஆர் வகுத்துள்ள வழிமுறைகளை கொரோனா பரிசோதனை கூடகள் பின்பற்றி அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களின் வாயில்களில் ஐ.சி.எம்.ஆர் வழிமுறைகளை குறித்த பேனர் வைக்கவேண்டும். வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் போது பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.