கரூரில் ஒன்றரை வயது குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை அடுத்த காந்திநகர் ஏரியாவில் வசித்துவரும் பழனி கமலா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை ஹரிஷுக்கு கடந்த ஒரு வாரமாக விடாது காய்ச்சல் அடித்துள்ளது. அதேபோல் உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதிக்க, பரிசோதனையில் மண்ணீரலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில்,
அந்த குழந்தைக்கு கவசாக்கி என்னும் அரிய வகை நோய் இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தைகள் நல மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விலையுயர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஐவி இமினோ குளோபின் என்னும் உயிர் பாதுகாப்பு எதிர்ப்பு அணுக்களை அதிகரிக்க கூடிய மருந்தை குளுக்கோஸ் மூலம் கிட்டத்தட்ட 16 மணி நேரமாக குழந்தையின் உடலில் செலுத்திய பிறகு நோய் நீங்கியது.
இருப்பினும் ஆறுமாதம் குழந்தை கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், இப்போது வழங்கப்படும் மாத்திரைகள் குழந்தைக்கு பூரண குணமடைந்து நலம் பெற்ற பின் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தும் மருத்துவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.