உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் பிரிட்டனை பின்னுக்குத்தள்ளிய இந்தியா 4ஆம் இடத்திற்குச் சென்றுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் 9000 நபர்கள் வரை கொரோனா உறுதி செய்யப்பட்டுவருகிறது. இதனால் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 97 ஆயிரத்து 832 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா, நான்காவது இடத்துக்குச் சென்றுள்ளது. முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா (20.76 லட்சம்), பிரேசில் (7.87 லட்சம்), ரஷ்யா (5.24 லட்சம்) பாதிப்புகளுடன் உள்ளன.