திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்துள்ள நாராயணங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், ராஜா, பாலகிருஷ்ணன் ஆகிய 4 நண்பர்களும் சேர்ந்து அதே பகுதியிலுள்ள விவசாய கிணறு ஒன்றின் அருகில் உட்கார்ந்து மது குடித்துவிட்டு சீட்டு விளையாடியுள்ளனர்.
அப்போது சங்கருக்கும், நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டது.. இந்த தகராறில் சங்கரை, தாக்கிய அவரது நண்பர்கள் அருகில் இருந்த விவசாய கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சங்கரின் மனைவி சத்யா தானிப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்துள்ள நிலையில், பாலகிருஷ்ணன் என்ற ஒரு குற்றவாளிக்கு மட்டும் கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஒப்புதல் வாக்குமூலம் சான்றில் கையெழுத்து போட மறுத்துள்ளார்.. இதனால், கடும் ஆத்திரமடைந்த சங்கரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் 1 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா ஒப்புதல் வாக்குமூலத்தில் கையெழுத்து போட்ட பின்னரே போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.